பெண்களை பார்ப்பதைத் தடுப்பதற்காக ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ள நாடு
ஆப்கானிஸ்தானில், பெண்களை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக ஜன்னல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜன்னல்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவர், பெண்கள் கண்ணில் படும் வகையில், வீடுகளில் ஜன்னல்கள் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, பெண்கள் அதிகம் புழங்கும் சமையலறை, வீட்டு பின்முற்றம், கிணறு அமைந்துள்ள இடம் ஆகியவற்றைப் பார்க்கும் வகையில், அருகிலுள்ள வீடுகளில் ஜன்னல்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளரான Zabihullah Mujahid தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சுவர்கள் எழுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதுடன், புதிதாக வீடுகளைக் கட்டுவோர், பக்கத்து வீட்டைப் பார்க்கும் வகையில் ஜன்னல்கள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள வீடுகளில் பெண்கள் நடமாடுவதை ஆண்கள் பார்த்தால், ஏதாவது ஒழுக்கக்கேடான விடயங்கள் நடந்துவிடலாம் என்றும், ஆகவே, அதிலிருந்து பெண்களைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் Zabihullah தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அப்போதிருந்தே பெண்களுக்கெதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
பெண்கள் படிக்கவும், வேலை செய்யவும், பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பிரசவம் மற்றும் மகளிர் நலனில் ஈடுபடும் தாதிப் பணி செய்யவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே தங்கள் உடலை மட்டுமல்ல, தங்கள் குரலையும் முக்காடு போட்டு மூடவேண்டும் என சமீபத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
வனொலியில் பெண்கள் குரலை ஒலிபரப்ப அனுமதியில்லை. பொது இடத்தில் எந்த ஆணுடனும் பெண்கள் நடமாடக்கூடாது.
கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, சாட்டையடி, தலை வெட்டல், தூக்குத் தண்டனை மற்றும் மரத்தில் ஆணியடித்துக் கொல்லப்படுதல் என பயங்கர தண்டனைகள் விதிக்கப்படும்.