தென் கொரிய விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி?
தாய்லாந்து விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தது எப்படி என்பது பற்றி நாம் இங்கு தெரிந்துகொள்வோம்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 181 பேருடன் ஜிஜு நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. இந்த விமானம் தலைநகர் சியோலில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியதால் வானளவிற்கு புகை கிளம்பியது.
உடனடியாக விமான நிலைய தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதன்பின் மீட்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், விமான பணிப்பெண் மற்றும் பயணி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமான ஊழியர்கள் 5 பேர் உட்பட 179 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விமான விபத்தில் 32 வயதாகும் லீ மற்றும் 25 வயதாகும் குவோன் என 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரும் கண் விழித்து பார்த்தபோது, என்ன நடந்தது? நான் ஏன் இங்கு இருக்கிறேன்? என்று மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினர்.
லீயின் இடது தோள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மயக்கத்தில் இருந்து வரும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குவோனுக்கு விபத்து ஏற்பட்ட நினைவுகள் அழிந்து போயுள்ளன.
இந்த இருவருமே விமான பணியாளர்கள் ஆவர். விபத்து ஏற்பட்ட சூழலின்போது இருவருமே மயங்கி விட்டதாலும், இடிபாடுகளில் அவர்கள் சிக்காமல் இருந்ததாலும் உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தன. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளது.