;
Athirady Tamil News

இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

0

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய சட்டதிட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் ஐயாயிரத்து நூறு தனியார் மருந்தகங்கள் செயற்படுகின்றன. இதுவரை காலமும் தனியார் மருந்தகம் ஒன்றை பதிவு செய்வதற்கு மட்டுமே தகுதிவாய்ந்த மருந்தாளர் ஒருவரின் பதிவு சான்றிதழ் தேவைப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளது.

பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும்
அதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்டிக கங்கந்த தெரிவிக்கையில்,

“தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மற்றும் தொடர்புடையவர்களை நாங்கள் கோரி வருகிறோம், ஆனால் எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

குறித்த முடிவினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாடாளவிய ரீதியில் செயற்படும் மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றார்கள். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவது அப்பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக அமையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனெனில் மக்கள் மருந்துகளைப் பெற கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆகவே, இந்த வியடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும் ஆபத்துள்ளது.

மருந்தாளரின் பதிவு முறையை அகற்றுவதல்ல எமது கோரிக்கை தகுதிவாய்ந்த மருந்தாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே எமது கோரிக்கையாகும்.

சான்றிதழ் அவசியம்
நாடு முழுவதும் தற்போது செயற்பாட்டில் உள்ள 5,100 மருந்தகங்களில் தகுதிவாய்ந்த மருந்தாளர்கள் பற்றாக்குறையால் பல மருந்தகங்கள் மூடப்படும் நிலைமையில் உள்ளன.

அத்தோடு தகுதிவாய்ந்த நபர்கள் வெளியேறுவதால் நாட்டில் மருந்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, இலங்கை மருத்துவ கவுன்சிலின் மீளாய்வுக்கு அமைவாக 6,700 மருந்தாளர்கள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளனர்.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைசட்டத்தின்படி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள் அல்லது தயாரிப்புகளை விநியோகிப்பது ஒரு மருந்தாளர் அல்லது ஒரு பதிவுசெய்யப்பட்ட பயிற்சி மருந்தாளரால் தலைமை மருந்தாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுள்ளது.

தகுதிவாய்ந்த மருந்தாளர்களைப் பணியமர்த்துவதற்கான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் எதிர்பார்ப்பு நியாயமானதாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை.

மருந்தாளர்களுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் விண்ணப்பத்தில், இலங்கை மருத்துவக் கவுன்சிலால் வழங்கப்படும் மருந்தாளர் தகுதி அல்லது செயற்திறன் சான்றிதழ் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மருந்தாளர்களுக்கான அரசாங்கத்தின் பரீட்சையில் தேர்வில் 5 சதவீமானவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.