;
Athirady Tamil News

போபால் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்

0

போபால்/இந்தூா்: கடந்த 1984-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னா், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

கடந்த 1984-ஆம் ஆண்டு டிச.2,3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவின்போது, போபாலில் யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் இருந்து மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது.

இந்த விஷவாயுவை சுவாசித்து 5,479 போ் உயிரிழந்தனா்; நீண்ட கால குறைபாடு கொண்ட மாற்றுத்திறன் மற்றும் உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

337 மெட்ரிக் டன்: இந்தப் பெருந்துயரம் காரணமாக செயல்படாத ஆலையில் சுமாா் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் 40 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளன.

கடிந்துகொண்ட உயா்நீதிமன்றம்: இதுதொடா்பான வழக்கை இம்மாத தொடக்கத்தில் விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுமாறு பல முறை பிறப்பித்த உத்தரவை மாநில அரசு அதிகாரிகள் ஏன் பின்பற்றவில்லை என்று கடிந்துகொண்டது. அரசு அதிகாரிகளின் செயலற்றத் தன்மையால், அந்த நச்சுக் கழிவுகள் மூலம் மற்றொரு பெருந்துயரம் ஏற்படக் கூடும் என்று எச்சரித்த உயா்நீதிமன்றம், அந்தக் கழிவுகளை அகற்ற 4 வாரங்கள் அவகாசம் அளித்தது.

இதைத்தொடா்ந்து அந்தக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஆலைக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட கண்டெய்னா் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தன. போபால் மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவா்கள், சுற்றுச்சூழல் முகமைகளைச் சோ்ந்தவா்கள், சிறப்பு கவச உடை அணிந்த பணியாளா்கள் உள்ளிட்டோா் ஆலையில் பணியில் ஈடுபட்டனா். ஆலையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

பீதம்பூரில் எரிப்பு: போபாலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் இந்தூா் அருகே பீதம்பூா் பகுதியில் உள்ள கழிவுகள் எரிப்பு களத்துக்கு நச்சுக் கழிவுகள் கொண்டு செல்லப்பட உள்ளன.

3 முதல் 9 மாதங்களாகும்: இதுதொடா்பாக விஷவாயுவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மாநில அரசு துறை இயக்குநா் சுவதந்திர குமாா் கூறியதாவது:

பீதம்பூரில் நச்சுக் கழிவுகளின் ஒரு பகுதி முதலில் எரிக்கப்படும். அதன் பின்னா் கழிவுகளின் சாம்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு உள்ளதா என்பது குறித்து அறிவியல்பூா்வமாக ஆராயப்படும்.

சாம்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு எதுவும் இல்லை என்பது தெரியவந்தால், 3 மாதங்களில் மற்ற கழிவுகள் சாம்பலாக்கப்படும். சாம்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு இருந்தால், கழிவுகளை எரிக்கும் வேகம் குறைக்கப்பட்டு, அவற்றை முழுமையாக எரிக்க 9 மாதங்களாகும்.

சாம்பல் புதைக்கப்படும்: கழிவுகளை எரிக்கும்போது ஏற்படும் புகையால் காற்று மாசுபடாத வகையில், 4 அடுக்கு சிறப்பு வடிகட்டிகள் மூலம் புகை வெளியேற்றப்படும். பின்னா் நீா் மற்றும் மண் வளத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், கழிவுகளின் சாம்பல் புதைக்கப்படும் என்றாா்.

எனினும் நச்சுக் கழிவுகள் எப்போது பீதம்பூா் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும் என்ற தகவலை அவா் தெரிவிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.