எல்லா மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே காணப்படுகிறது -சி.வி.கே.சிவஞானம்
சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அனுர குமார திஸாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு இளைஞர்கள் பலர் முன்வருவதில்லை என்று ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் மீளவும் புதிய தெரிவு இடம்பெற வாய்ப்புள்ளது.
இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் மூலக்கிளைகள் ஊடாக அங்கத்துவத்தைப் பெற்று இரண்டு வாரங்களுக்குள் கட்சி இணைந்து கொண்டால் கட்சி தீர்க்கமான நல்ல முடிவை எடுத்து ஆற்றலுள்ளவர்களை, கல்வி கற்றவர்களை, இளையோரை தெரிவு செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களில் கட்டமைப்பு ரீதியில் இயங்குவதுடன், எல்லா மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே காணப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றங்களில் அனுபவம் வாயந்த தலைமைத்துவம் வகித்தவர்கள் எங்களுடன் இருக்கின்றார்கள்.ஆகவே அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.