;
Athirady Tamil News

விண்கலங்களை இணைக்கவிருக்கும் இந்தியா

0

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.

இதனை முன்னிட்டு, டிசம்பர் 30ஆம் தேதியன்று இரண்டு விண்கலங்களை அது பாய்ச்சியது.

இரு விண்கலங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் விண்வெளியில் விண்கலங்களை இணைத்த நான்காவது நாடாக இந்தியாவுக்குப் பெருமை சேரும்.

இந்தத் திட்டத்துக்கு ஸ்பாடெக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சிங்கப்பூர் நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்குச் (இஸ்‌ரோ) சொந்தமான பிஎஸ்எல்வி விண்கலம் பாய்ச்சப்பட்டது.

இந்த பிஎஸ்எல்வி விண்கலத்துக்குள் இரண்டு ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஏறத்தாழ 15 நிமிடங்கள் கழித்து, பிஎஸ்எல்வி விண்கலம் 470 கிலோமீட்டர் உயரத்தை அடைந்ததை அடுத்து, விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டதாக திட்டத்தின் இயக்குநர் அறிவித்தார்.

பிஎஸ்எல்வி விண்கலத்துக்குள் இருக்கும் இரண்டு விண்கலங்களும் புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இரு விண்கலங்களும் தலா 220 கிலோ எடை கொண்டுள்ளன.

புவிசுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படும் இரு விண்கலங்களுக்கு இடையே மின்சாரப் பரிமாற்றம் நடந்தேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, பிஎஸ்எல்வி விண்கலத்திலிருந்து பிரிந்து சென்றதும் இரு விண்கலங்களுக்கும் மிகவும் முக்கியம்.

அப்போதுதான் விண்கலங்களில் பொருத்தப்பட்டுள்ள படமெடுக்கும் கருவிகள், கதிர்வீச்சு கண்காணிப்புச் சாதனங்கள் செயல்படும்.

எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான முக்கியமான தரவுகளை இவ்விரு விண்கலன்கள் பூமிக்கு அனுப்பிவைக்கும்.

விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஒரு வாரத்தில் சோதனையிடப்படும் என்று இஸ்‌ரோ தலைவர் எஸ். சோமநாத் தெரிவித்தார்.

பிஎஸ்எல்வி விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டதை அடுத்து, இந்தியாவின் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி இஸ்‌ரோவைப் பாராட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.