;
Athirady Tamil News

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடையா?

0

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை நதிக்கரையில் வெகு சிறப்பாக நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி கூறியுள்ளார்.

‘கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும், அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைப் பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

டீக்கடைகள், பழச்சாறு கடைகள், பூக்கடைகள் ஆகியவற்றை அமைக்க இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களில் ஈடுபடலாம். அத்தகைய நடவடிக்கைகள் நாகா துறவிகளுடன் மோதல்களுக்கு வழிவகுக்கும், நிகழ்வின் அமைதியான சூழல் கெடும்.’ என்று கூறியுள்ளார்.

அகில பாரதிய அகாரா பரிஷத்தின் இந்த முடிவுக்கு அகில இந்திய முஸ்லீம் ஜமாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது கும்பமேளா குறித்துப் பேசினார்.

‘இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா. இந்த நிகழ்வில் எந்த பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்’ என்று கூறி நாட்டில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.