கணிக்கவே முடியாத ட்ரம்பால் அது கட்டாயம் நடக்கும்… ஜெலென்ஸ்கி நம்பிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் கணிக்க முடியாத தன்மை ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீதியடைய வைத்துள்ளது
எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கிறார். இந்த நிலையில், மூன்றாண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போரினை வெறும் 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர தம்மால் முடியும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால் ட்ரம்பின் இந்த அறிவிப்பு உக்ரைனை பீதியடைய வைத்துள்ளது. அமைதி திரும்பும் பொருட்டு, ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கும் கட்டாயம் ஏற்படலாம் என்றும் உக்ரைனுக்கு அச்சம் எழுந்துள்ளது.
சமீபத்தில் உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்றில் நேர்காணம் அளித்துள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உண்மையில் வலிமையான மற்றும் கணிக்க முடியாதவர் டொனால்டு ட்ரம்ப் என குறிப்பிட்டுள்ள அவர், அவரது இந்த நிலை உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவர உதவலாம் என்றார்.
அச்சமே காரணமாக
நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்ததும் ட்ரம்ப் தரப்புடன் ஒரு இணக்கமான உறவை உருவாக்க ஜெலென்ஸ்கி தரப்பு முயன்று வந்துள்ளது. அமெரிக்க உதவிகள் ரத்தாகலாம் என்ற அச்சமே காரணமாக கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யாவுடன் எதிர்காலத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைனில் அமைதி காக்கும் படையினரை நிறுத்தும் பிரான்ஸ் யோசனையை ஜெலென்ஸ்கி ஆதரித்துள்ளார்.