மருத்துவ இடங்களை காலியாக விட முடியாது: உச்சநீதிமன்றம்
‘மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்படுவதை அனுமதிக்க முடியாது. இதுதொடா்பாக அடுத்த 3 மாதங்களுக்குள் உரிய முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயா் சிறப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் பல இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 2023-ஆம் ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடு முழுவதும் மிகவும் மதிப்புமிக்க 1,003 உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் மாணவா் சோ்க்கை நடத்தப்படாமல் வீணடிக்கப்பட்டிருப்பது, மிகவும் மோசமான நிலையைக் காட்டுகிறது.
ஒருபுறம் உயா் சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறை இருந்து வரும் சூழலில், மறுபுறம் மதிப்புமிக்க அந்த படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் விடப்படுகின்றன’ என்று தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று காலியாக விடப்படும் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரச் சேவைகள் துறை இயக்குநா் தலைமையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அரசு அதிகரிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அரசு நியமித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரம் தொடா்பாக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை சமா்ப்பித்துள்ளது. அதனடிப்படையில், இத் துறை சாா்ந்த பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வலுவான முடிவை எடுக்கும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக விடப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, குழு அளித்த பரிந்துரைகள் தொடா்பாக பல்வேறு தரப்பினரிடம் விரைந்து ஆலோசனை மேற்கொண்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.