யாழில். 14 வருடங்களாக சட்டரீதியாக சுண்ணக்கல் அகழ்கின்றோம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுண்ணக்கற்களை அகழ்ந்து சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்து வருகின்றோம் என வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
அதன் போதே அவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சட்டரீதியான தரவுகளை அறியாது, உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுதும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இதனால் நேரடியாக பயன்பெறும் 180 தொழிலாளர்களுடன் 68 ஆண்டுகள் பாரம்பரியத்தை கெண்டுள்ள எமது வியாபார நிறுவனத்தின் நற்பெயருக்கு திட்டமிட்ட வகையில் சேறுபூசப்பட்டுள்ளது.
இதையடுத்து நாம் நாளுடன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
இதேநேரம் குறித்த வியாபாரத்தை நாம் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் இந்த சுண்ணக்கல்லினை கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்தும் வருகின்றோம்
இதேநேரம் நாம் அகழப்படும் சுண்ணக்கல்லை நேரடியாக வியாபாரம் மேற்கொள்ளவில்லை. வலிவடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியில் இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களை தற்போது மக்கள் மீளவும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிலங்களில் இந்த சுண்ணக்கல் பாறைகள் அகழப்பட வேண்டியதும் கட்டாயமாக இருக்கின்றது.
இதனால் குறித்த நிலங்களின் உரிமையாளர்கள் அனைத்து துறைசார் திணைக்களங்களிலும் அனுமதியை பெற்று கனரக வாகனங்கள் கொண்டு அனுமதியளிக்கப்பட்ட வரையறைக்கு ஏற்ப சுண்ணக் கற்களை பெரும் செலவு கொடுத்து அகழ்ந்து வருகின்றனர்.
இதேநேரம் இந்த சுண்ணக்கல் அகழ்வை அப்பகுதிகளை சேர்ந்த பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாகவே காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவ்வாறு அகழப்படும் சுண்ணக் கற்களை காணி உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றார்கள். அதை அப்பகுதியில் இருக்கும் 65 இற்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள் (“கிறெசர்”) தமது தொழில் நடவடிக்கைக்கான அனைத்து அனுமதிகளையும் துறைசார் தரப்பினரிடம் பெற்று தமது ஆலைகளுக்கு கொண்டு சென்று உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்கின்றார்கள்.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விடயம் தொடர்பில் ஆராயாமால் அல்லது ஏதொவொரு காரணத்தை முன்னிறுத்தி இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார் என உணர முடிகின்றது என தெரிவித்தார்.