செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
செய்தியாளர் அசேல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை(3) நான்கு சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி தெசீபா ரஜீவன் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸார் இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.அத்துடன் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்திருந்ததுடன் செய்தியாளரை தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை அன்றைய தினம் இரவு கைது செய்திருந்தனர்.இதற்கமைய குறித்த சம்பவத்துடன் 09 சந்தேக நபர்கள் சம்மாந்துறை மற்றும் இறக்காமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதில் ஏலவே சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒரு சந்தேக நபரும் இறக்காமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.ஏனைய 05 சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் 4 சந்தேக நபர்களும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை(3) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் ஜனவரி 07 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை(2) அன்று சம்மாந்துறை பகுதியில் செய்தி சேகரித்து கொண்டிருந்த அம்பாறை மாவட்ட நியூஸ் பெஸ்ட் செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை குறித்த செய்தியாளர் வெளிக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்திருந்தார்.உண்மை செய்தியை வெளியில் கொண்டு வர முயன்ற குறித்த செய்தியாளர் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்டிருந்தார்.குறித்த மண் அகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நயினாக்காடு பகுதியில் உள்ள ஆற்றுப்படுக்கையை மையப்படுத்தி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வயல் நிலங்களில் தேங்கியுள்ள மணல்களை அகழ்வதற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட அனுமதியினை துஸ்பிரயோகப்படுத்தி இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.