;
Athirady Tamil News

தனியார் வாகன இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம் : 300 வீத வரி அறவீடு

0

தனியார் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதல் நீக்கப்படும் நிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றத்தில் அதன் தாக்கத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை உயர்த்துவதும் வரி வருமானத்தை அதிகரிப்பதுமே, வாகன இறக்குமதித் தடையை நீக்குவதில் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

எனினும் வாகன இறக்குமதியை அனுமதிக்கும்போது இன்னும் ஆபத்து உள்ளது.

கட்டுப்பாடுகள் நீக்கம்
இது, அந்நிய செலாவணி வெளியேற்றத்தையும் ரூபாயின் ஏற்ற இறக்கத்தையும் எவ்வாறு சரியாகப் பாதிக்கும் என்பது தமக்கே தெரியாது என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரே அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் எவ்வளவு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதை தங்களால் அளவிட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவதற்கான முன்மொழிவு, இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அதன் பிறகு அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும்.

வாகன இறக்குமதித் தடையை நீக்குவது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்ற வகையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், அது சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும் திறைசேரியின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு தேய்மானம் அதிகமாக நிரூபிக்கப்பட்டால், சில கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர், குறிப்பிட்டுள்ளார்

தற்போதைய நிலையில், சில வாகன வகைகளில் ஐந்து ஆண்டுகள் வரை பழமையான வாகனங்களை இறக்குமதி செய்யலாம்,

எனினும் ஏனைய வகை வாகனங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் திறைசேரி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 300வீதம் வரை வரி விதிக்கப்படும், மேலும் இந்த வரியில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை அனுமதிப்பதன் மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னர், சுமார் 22,000 வாகன அனுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த இறக்குமதிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.