ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம், சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இக்குழு அண்ணா பல்கலை.யில் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தியது.
சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கோட்டூர்புரம் லேக் வியூ ஏரியாவில் உள்ள ஞானசேகரனின் வீட்டில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், ஒரு பட்டாக்கத்தி, ஒரு மடிக்கணினியை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஆவணங்களை இரு பெரிய அட்டைப் பெட்டிகளில் வைத்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில், ஞானசேகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.