;
Athirady Tamil News

பேருந்து – கார் மோதல்: சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் பலி!

0

கொல்லம்: கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சபரிமலை பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, சனிக்கிழமை(ஜன. 4) திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கொல்லம் மாவட்டத்தின் சடையமங்களம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சடையமங்களம் அருகேயுள்ள நீட்டத்தரா பகுதியில் சனிக்கிழமை(ஜன. 4) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட மொத்தம் மூவர் படுகாயமுற்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தின் முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரின் மீது பேருந்து மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட அந்த காரில் சென்றவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன், சண்முகம் ஆசாரி(70) ஆகிய இருவர் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.