உக்ரைன் எடுத்த முடிவு… தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்தம்பித்த ஐரோப்பிய பிராந்தியம்
மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு பிராந்தியமான Transdniestria தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்தம்பித்துள்ளது.
பல மணி நேர மின்வெட்டு
உக்ரைன் ஊடாக ரஷ்ய எரிவாயு விநியோகம் முடங்கியதை அடுத்து, தற்போது தொழிற்சாலைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன், பல மணி நேர மின்வெட்டும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உக்ரைன் வழியாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகமானது ஒப்பந்தம் காலாவதியான பிறகு புத்தாண்டு தினத்தன்று நிறுத்தப்பட்டது. மட்டுமின்றி பல ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்து வந்த ஒப்பந்தத்தை உக்ரைன் புதுப்பிக்கவும் மறுத்துள்ளது.
ரஷ்ய மொழி பேசும், ரஷ்ய ஆதரவு பிராந்தியமான Transdniestria கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யாவின் மிகப்பெரிய Gazprom நிறுவனத்திடம் இருந்தே, எரிவாயு வாங்கி வந்துள்ளது.
உக்ரைன் வழியாக பெறப்படும் இந்த எரிவாயுவை பயன்படுத்தியே உள்ளூரில் மின்சாரம் வழங்கும் அனல்மின் நிலையம் இயக்கப்பட்டது. மட்டுமின்றி இந்த மின்சாரம் மால்டோவாவுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்துள்ளது.
அனைத்து தொழிற்சாலைகளும்
இந்த நிலையில், Transdniestria பிராந்தியத்தின் தலைவர் Vadim Krasnoselsky தெரிவிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 4 மணி நேரமாக மின்வெட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே சனிக்கிழமையும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருந்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு உற்பத்தியைத் தவிர அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கடும் குளிர் காலம் என்பதால் இந்த நெருக்கடியான சூழலில் வயதானவர்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் என்றும் Vadim Krasnoselsky தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அலைபேசிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எரிவாயு விவகாரத்தில் ரஷ்யாவை குற்றஞ்சாட்டியுள்ளது மால்டோவா அரசாங்கம். Turkstream குழாய்களை பயன்படுத்தி பல்கேரியா மற்றும் ருமேனியா வழியாக Gazprom நிறுவனத்தால் எரிவாயு விநியோகம் செய்யலாம் என்றும் மால்டோவா அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே ஜனவரி 1ம் திகதி முதல் மால்டோவாவுக்கு எரிவாயு வழங்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்ததாக Gazprom தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 709 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எரிவாயு வாங்கியதில் மால்டோவா இன்னும் ரஷ்யாவுக்கு செலுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் அது பொய் கணக்கு என்றும் 8.6 மில்லியன் டொலர் மட்டுமே செலுத்த வேண்டிய தொகை என்றும் மால்டோவா பதிலளித்துள்ளது.