12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்
காங்கோவில் தங்க கட்டிகள் மற்றும் பணத்துடன் மூன்று சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கக் கட்டிகளுடன் பிடிபட்ட சீனர்கள்
கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில் 12 தங்க கட்டிகள் மற்றும் 800,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 650,000 பிரிட்டிஷ் பவுண்டுகள்) ரொக்கப் பணத்துடன் மூன்று சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.
சவுத் கிவு மாகாண ஆளுநர் ஜீன் ஜாக்ஸ் புருசி(Jean Jacques Purusi) தலைமையிலான ரகசிய நடவடிக்கையின் போது இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
நம்பகமான தகவலின் அடிப்படையில் ருவாண்டா எல்லையை ஒட்டியுள்ள வாலுங்கு பகுதியில் நடத்தப்பட்ட விரிவான தேடுதலில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வாகனத்தின் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் துல்லியமான எடை வெளியிடப்படவில்லை.
விடுவிக்கப்பட்ட 17 சீனர்கள்
இதற்கிடையில், சட்டவிரோதமாக தங்கச் சுரங்கத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 17 சீனர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டதில் சவுத் கிவு மாகாண ஆளுநர் புருசி கவலை தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட நபர்கள் அரசுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி மற்றும் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதனை குறிப்பிட்டு, இந்த நடவடிக்கை நாட்டின் கனிமத் துறையில் ஊழல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை பாதிக்கும் என்று ஆளுநர் புருசி கருத்து தெரிவித்து இருந்தார்.
நவீன தொழில்நுட்பங்களுக்காக கிழக்கு டிஆர் காங்கோவின் கனிம வளமானது காலனி ஆதிக்க காலத்திலிருந்தே வெளிநாட்டு நிறுவனங்களால் சுரண்டப்பட்டு வருகிறது.
இந்த கனிம வளங்கள் நாட்டில் நிலைத்தன்மையின்மை மற்றும் மோதலைத் தூண்டுகின்றனர், அத்துடன் பல தன்னார்வலர் குழுக்கள் சுரங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி அவற்றிலிருந்து லாபம் ஈட்டவும் முயற்சித்து வருகின்றனர்.
சீன நாட்டினரின் தொடர் கைதுகளுக்கு மத்தியில் சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.