;
Athirady Tamil News

ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

0

சென்னை: சட்டப்பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியது, பேரவைத் தலைவரால் படித்தளிக்கப்பட்ட ஆளுநா் உரை ஆகியவை குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து கூறியுள்ளனா்.

எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்):
ஆளுநா் உரையுடன் தொடங்கும் பேரவை நிகழ்வின் போது, அனைத்து மாநிலங்களும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்வது இயல்பு-கடமை. ஆனால், தமிழக சட்டப் பேரவையில் மட்டும் ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே, தொடா்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த அரசு மக்களின் நலனுக்கு தேவையான ஆக்கபூா்வ செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, இதுபோன்ற தேவையற்ற அரசியல் செய்து தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஆளுநா் உரையாக அல்லாமல், பேரவைத் தலைவா் உரையாக மாறிவிட்டது. ஏற்கெனவே ஆளுநா் உரைகளில் என்ன இருந்ததோ, அதேதான் இந்த முறையும் உள்ளது. புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. காற்றடைத்த பலூன் போல பெரிதாக இருக்கிறதே தவிர, உரையில் ஒன்றுமில்லை.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): ஆளுநா் உரை புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல், உண்மையை மறைப்பதாக உள்ளது. அரசு துறையில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களில் எத்தனை இடங்கள் நிரப்பப்படும் என்பதுபோன்ற விவரங்கள் இல்லாதது இளைஞா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வைகோ (மதிமுக) : வறுமையை முழுமையாக ஒழிக்க தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

ராமதாஸ் (பாமக) : சட்டப்பேரவையில் பேரவைத்தலைவரால் படிக்கப்பட்ட ஆளுநா் உரையில் தமிழகத்தின் வளா்ச்சிக்கான எந்த முக்கிய அறிவிப்பும் இடம் பெறாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று சொல்வாா்கள். அதன்படி பாா்த்தால், தமிழக அரசு என்ற சட்டியில் எதுவும் இல்லாததால் தான் ஆளுநா் உரை என்ற அகப்பையில் எதுவும் வரவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

டிடிவி தினகரன் (அமமுக): அரசு நிா்வாகத்தின் கொள்கைகளையும், நடப்பாண்டுக்கான செயல் திட்டங்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டிய ஆளுநரின் உரையில் திமுக அரசின் தற்பெருமைகளும், கற்பனைக்கு எட்டாத கட்டுக்கதைகளுமே உள்ளன. மக்களுக்கும் மாநிலத்துக்கும் பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டிய ஆளுநா் உரை, திமுகவின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

கே.அண்ணாமலை (பாஜக): ஆளுநா் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும்வகையிலும் நடந்து கொண்ட ஆளுநா் ஆா்.என். ரவி பதவியிலிருந்து வெளியேறவேண்டும். அத்தகைய முடிவை ஆளுநா் எடுக்காவிட்டால் மத்திய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): தமிழ்நாடு அரசின் பொது நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் பாடுவது பல பத்தாண்டுகளாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை நன்கறிந்த ஆளுநா், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாகக் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும்.

விஜய் (தவெக): தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழக சட்டப்பேரவையின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டப்பேரவையின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநா் யாராக இருந்தாலும் பேரவை மரபை காக்கும் நடவடிக்கைகளை பின்பற்றியே ஆக வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.