இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு – ஐரெக் (ITEC) – விண்ணப்பிக்கும் முறைமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்
அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கு மாகாண அரசசேவை பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கையின்பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு – ஐரெக் (ITEC) – விண்ணப்பிக்கும் முறைமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கலாச்சார நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07.01.2025) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில்,
அரச பணியாளர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பயிற்சிகள் அவசியமாகின்றன. காலத்துக்கு காலம் அரச பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதும் இதற்குத்தான். எமது மாகாணத்தைச் சேர்ந்த அலுவலர்கள் ஐரெக் ஊடான பயிற்சிக்கு விண்ணப்பிப்பது குறைவாக இருந்ததாக துணைத்தூதுவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இம்முறை அதை அதிகமாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.
வடக்கு மாகாண சபைக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கும் இடையிலான உறவு நெருக்கமானது. அவர்கள் இவ்வாறான பயிற்சிகளை மாத்திரமல்ல எமது மாகாணத்துக்கு பல்வேறு உதவிகளையும் செய்திருக்கின்றார்கள். குறிப்பாக இன்றும் இந்திய வீட்டுத் திட்டம் என்று அவர்களால் எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை அழைக்கின்றோம். அது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை.
கெளரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் சுட்டிக்காட்டுவதைப்போன்று மக்களின் நம்பிக்கையை அரச சேவையாளர்கள் வென்றெடுக்கவேண்டும். அதற்கு இவ்வாறான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும், என்றார் ஆளுநர்
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சிறிசாய் முரளியும் கலந்துகொண்டார்.