உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
குறித்த நேரத்தில் திறமையான மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க நீதிமன்றத்திற்கு ஆதரவளிக்குமாறு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (ஜன. 7) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரி (tax)செலுத்தாத தனியார் நிறுவனமொன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தினால், நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலையாகாத ஆணையாளர்
எனினும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், மாஜிஸ்திரேட் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா,உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுகயீனமுற்றிருப்பதனால் நீதிமன்றில் முன்னலையாக முடியாது எனவும், அதற்காக நீதிமன்றில் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார்.
ஏழு மில்லியன் வரியை செலுத்தாத தனியார் நிறுவனம்
ஏழு மில்லியன் வரியை செலுத்தாத தனியார் நிறுவனத்திற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
பிரதிவாதியான தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி வி.ஜி.கருணாசேன முன்னலையாகியதுடன் , இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டத்தரணி முன்வைத்த உண்மைகளை கவனத்தில் கொண்ட நீதவான், வழக்கை கிடப்பில் போடுமாறு உத்தரவிட்டார்.