கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராமத்தினை முன்னுரிமைப்படுத்தல் வேலைத் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்
வடமாகாண ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 2025ம் ஆண்டு அபிவிருத்தி திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அபிவிருத்தி தேவைப்பாடுகளுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்து குறித்த கிராமத்தினை அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியான ஒரு கிராமமாக முன்னேற்றும் செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் அம்பாள்நகர் கிராம அலுவலகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவுசெய்துள்ள நிலையில், குறித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(07.01.2025) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் பூ.ராஜ்வினோத் தலைமையில்,சாந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த கிராமத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் முன்வைத்த கருத்துக்கள் துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகளால் ஆராயபப்பட்டன.
குறிப்பாக இக் கிராமத்தின் தேவைப்பாடுகளாக கல்வி, விளையாட்டு, நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விவசாயம், சுகாதாரம், குடிநீர், உற்பத்திகளை சந்தைப்படுத்தல், சட்டவிரோத செயற்பாடுகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய வகையில் அம்பாள்நகர் மாதிரிக் கிராம திட்டம் தயாரிக்கப்படும்.
இங்கு அபிவிருத்தி செயற்பாடுகள் மட்டுமன்றி சகல விடயங்களும் பூர்த்தி செய்து குறித்த திட்டம் 31.06.2025ம் திகதிக்கு முன் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இத் திட்டமானது ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைந்த வகையில் வடக்கு மாகாண சபை மற்றும் திணைக்கள நிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தமது வரையறைக்குட்பட்ட திட்டத்துடன் இணைந்த நிதிகளின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படும்.|
இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.மாதுகி, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் , மத்திய மற்றும் மாகாண ஆளுகைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.