ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா
வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் நேரிட்ட வன்முறை மற்றும் கலவரத்தின்போது, பலர் கொலை செய்யப்பட்டனர், ஏராளமானோர் காணாமல் போன நிலையில், வன்முறை காரணமாக, வங்கதேசத்திலிருந்து வெளியேறிய அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் 96 பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ததாக வங்கதேச இடைக்கால அரசு நேற்று அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு, ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்திலிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், வங்கதேசத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அரசு ஆலோசகர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிடமிருந்து கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்த முஜிபுா் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா, 1975-இல் பிரதமராக இருந்த முஜிபுா் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது வெளிநாட்டில் இருந்ததால் உயிா் தப்பினாா்.
பின்னா் 1981-இல் நாடு திரும்பிய அவா், ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடினாா். 1991-இல் நடைபெற்ற தோ்தலில் அவரது அவாமி லீக் கட்சி தோல்வியடைந்தது. பின்னா் 1996 தோ்தலில் வெற்றி பெற்று பிரதமா் ஆன அவா், 2001 தோ்தலில் மீண்டும் பதவியிழந்தாா்.
ஆனால் 2008-இல் நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி மூலம் அவா் அடைந்த பிரதமா் பதவியை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவா் போராட்டத்தால் மட்டுமே பறிக்கமுடிந்தது.