இலங்கையில் பதிவு செய்யப்படாத கைபேசிகளுக்கு தடை!
எதிர்காலத்தில் இலங்கையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
விசேட வேலைத்திட்டம் இம்மாத இறுதிக்குள்
அதோடு அதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது பாவனையில் உள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு இந்த புதிய வேலைத்திட்டம் இடையூறு ஏற்படுத்தாது எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சட்டவிரோதமான தகவல் தொடர்பு சாதனங்களை முறையான தரம் இன்றி கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
நாட்டின் நுகர்வோருக்கு இதுபோன்ற உபகரணங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும். இதற்காக இம்மாத இறுதியில் தானியங்கி முறையை அமுல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை இந்த அமைப்பில், தற்போது பயன்படுத்தப்படும் மொபைல் போன்கள் தடுக்கப்படவில்லை மற்றும் வெளிநாட்டவர்கள் பாவிக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.