;
Athirady Tamil News

சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது தாக்குதல்! 19 பேர் பலி!

0

ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசின் அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.

சாட் குடியரசு நாட்டின் தலைநகர்
நிஜாமீனாவிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று (ஜன.8) இரவு 7.45 மணியளவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு உடனடியாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதில், அதிபரின் பாதுகாவலர் ஒருவர் மற்றும் தாக்குதல்காரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதியின் சாலைகள் பாதுகாப்புப் படையினரால் முடக்கப்பட்டு ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியிலிருந்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில், இருதரப்பிலும் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், ஒரு பாதுகாப்பு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பான போக்கோ ஹராம் நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு இதை முழுமையாக மறுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்டெரமான் கௌலமல்லாஹ் கூறியதாவது: இந்த தாக்குதலை எந்தவொரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் நடத்தவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த போதைக்கு அடிமையான சிலர்தான் நடத்தியுள்ளனர் என்றார்.

முன்னதாக, அந்நாட்டு அதிபர் மஹாமட் டெபி இட்னோ மாளிகையினுள் இருக்கும்போது நடைபெற்ற இந்த தாக்குதலை பாதுகாப்புப் படையினர் விரைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இன்னும் இரண்டு வாரங்களில் அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.