;
Athirady Tamil News

அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும்

0

“அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க மண்டபத்தில் “அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வடகிழக்கு மாகாண விவசாய மேம்பாட்டு கழக உறுப்பினர் தனபாலசிங்கம் துளசிராம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அதன் போது, அரிசியின் அரசியலை பற்றி விளக்கி கலாநிதி அகிலன் கதிர்காமர் உரையாற்றும் போது,

1953ம் ஆண்டு அரிசியின் விலையை சடுதியாக அரசாங்கம் அதிகரித்ததால் பெரும் ஹர்த்தால் வெடித்தது. இதனால் அன்றைய சட்ட சபை பிரித்தானிய போர் கப்பலில் சந்தித்ததுடன் பின்னர் நடந்த தேர்தலில் அக்கட்சி தோற்றது

அவ்வாறான போராட்டத்தால் 25% அரிசியில் தன்னிறைவடைந்திருந்த இலங்கை சில தசாப்த்தங்களிலே 90% தன்னிறைவையடைந்திருந்தது

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி மத்தியில் அரிசியானது எமது உணவுப் பாதுக்கப்பிற்கு முக்கியமானதொன்றாகும்.

அரிசி நாட்டுக்கு போதுமான அளவு உற்பத்தியாகின்ற போதிலும் அதனை விநியோகிப்பதில் உள்ள பிரச்சினையால் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது. இந்த பின்னனியில் தான் கூட்டுறவு முக்கியமான சமூக நிறுவனமாக உள்ளது.

கூட்டுறவால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விஸ்திரப்டுத்துவதுடன் உணவு பாதுகாப்பிற்காக உணவு விநியோகம் செய்யும் பொது நிறுவனமாகவும் தொழிற்படும். கூட்டுறவால் அரிசியின் விலையை சந்தையில் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறமுடியும்

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி வரப்புயர கடன் மூலம் விவசாயிகளுடன் தொடர்பில் உள்ளது. 6 வருடத்திற்கு முதல் செய்த வடக்கில் உள்ள கூட்டுறவுகளின் அரிசி ஆலைகள் தொடர்பான ஆய்வுகளின் அக்னி இங்குள்ள 16 கூட்டுறவுகளின் அரிசி ஆலைகளும் முழு திறனில் இயங்குமானல் 10,000 மெற்றிக் தொன் நெல் அடிக்கலாம்.

அரசாங்கம் தேசிய உற்பத்தியில் 10% கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வடக்கில் கூட்டுறவும் இந்த பாதையில் இணைந்து கொள்வனவில் ஈடுபடவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து பதிலுரையாற்றிய தனபாலசிங்கம் துளசிராம், உணவு பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள அரிசிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ள நிலையில் அதற்காக அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயண்படுத்தி் கூட்டுறவாக இனைந்து பணியாற்ற வேண்டும்.

கூட்டுறவு சங்களினுடாக விவசாயிகள் நெல்லை சந்தைபடுத்துவதன் மூலம் நியாயமான விலையில் நெல்லினை விற்பனை செய்ய முடியும்.

மேலும் பெரும் போகத்திற்கான அறுவடை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அரசாங்கம் விரைவில் நெல்லிற்கான விலையை அறிவித்தல் பொருத்தமானது எனதெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.