;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

0

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) திறந்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் செயலர் திருமதி தாரணி கஜமுகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், ஒதுக்கப்படும் நிதியை உரிய காலத்தில் செலவு செய்து முடிப்பதென்பது எமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. ஆனால் இந்தக் கட்டடத்தை மிக நேர்த்தியாக உரிய காலத்தில் நிறைவேற்றிய ஒப்பந்தகாரருக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும்.
கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கியபங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாக செயற்படுத்தவேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும்.
தற்போது எமக்குள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலர் ஆகியோர் இளையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் உத்வேகத்துடனும் துடிப்புடனும் செயலாற்றுகின்றனர். இந்தப் பொதுச் சந்தைக்குரிய காணியை கொள்வனவு செய்து கட்டடம் அமைத்து இன்று மக்களுக்கு கையளிக்கின்ற சபையின் செயலரையும் பணியாளர்களையும் பாராட்டுகின்றேன். இதேபோன்று திறம்பட பணியாற்றுவதுடன் எதிர்காலத்தில் இந்தப் பொதுச் சந்தையை பராமரிப்பதிலும்தான் இதன் வெற்றி தங்கியிருக்கின்றது, என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் சத்தியசீலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பொ.சிறீவர்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.