கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய எண்ணெய் கப்பலால் ஆபத்து., பாதுகாப்பாக மீட்ட ஜேர்மனி
பால்டிக் கடலில் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்தான நிலையில் இருந்த ரஷ்ய எண்ணெய் கப்பலை ஜேர்மனி பாதுகாப்பாக மீட்டுள்ளது.
பால்டிக் கடலில் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் ஜேர்மனியின் பாதுகாப்பிற்கும் சுற்றுலா துறைக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் அனலேனா பார்போக்ச் எச்சரித்துள்ளார்.
பனாமா தேசியக்கொடியுடன் பயணித்த இவேன்டின் (Eventin) எனும் கப்பல், 99,000 மெட்ரிக் டன் ரஷ்ய எண்ணெயுடன் எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜேர்மனியின் ரூஜென் தீவிற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது.
இதை ஜேர்மனியின் பிரெமன் ஃபைட்டர் டக் போர்ட் பாதுகாப்பாக இழுத்துவந்து நிலைநிறுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eventin ரஷ்யாவின் shadow fleet என அழைக்கப்படும் பழைய கப்பல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று Greenpeace அமைப்பு கூறுகிறது.
இந்த பழைய கப்பல்கள் சர்வதேச தடைகளை தவிர்த்து எண்ணெய் வருவாயை ரஷ்ய அரசுக்கு பரிந்துகொடுக்க பயன்படுகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யாவின் முழுமையான போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும் நோக்கில் தடைகள் விதிக்கப்பட்டன. இதை தவிர்க்க, ரஷ்யா பழைய மற்றும் முறைகேடான கப்பல்களை பயன்படுத்தி வருகிறது.
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பார்போக்ச், ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, அதன் தடையை மீறும் முயற்சிகள், பழைய எண்ணெய் கப்பல்களின் தீவிர அபாயங்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவை ஐரோப்பிய பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளன என்று கூறினார்.
மேலும், இவ்வகை செயல்பாடுகள் பால்டிக் கடலில் சுற்றுலா துறைக்கும் தடையாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ரஷியாவின் சர்வதேச சட்ட மீறல்களுக்கும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் உருவான ஆபத்தை வெளிப்படுத்துகிறது.