புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி பாதிப்பு
புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எச்எம்பி வைரஸ் தொற்று தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு எச்எம்பி வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தை முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த குழந்தைக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவில் எச்எம்பி வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தையின் பெற்றோருக்கு முன்னெச்சரிக்கையாக சுகாதார விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாகவும், மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை கருவிகள் தயாராக இருப்பதாகவும், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை என்றும், புதுச்சேரி கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில், எச்எம்பி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர்களை அனுமதிக்க 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக ஐ.சி.யூ. வசதியும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.