உக்ரேனிடம் உயிருடன் சிக்கிய வடகொரிய வீரர்கள்… ஜெலென்ஸ்கி வெளியிட்ட பின்னணி
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக
கடந்த இலையுதிர்காலத்தில் போரில் நுழைந்ததிலிருந்து வட கொரிய வீரர்கள் உயிருடன் சிக்கியதாக உக்ரைன் முதல் முறையாக அறிவித்துள்ளது. வட கொரிய துருப்புக்கள் அக்டோபரில் ரஷ்யா ஆதரவாக போரில் நுழைந்தன.
உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், வடகொரிய வீரர்களின் எண்ணிக்கை 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்றே மதிப்பிட்டன.
இந்த நிலையில், சமூக ஊடகபக்கத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, குர்ஸ்க் பகுதியில் வைத்து இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்துள்ளதாகவும், அவர்கள் உக்ரைன் பாதுகாப்பு சேவை மற்றும் நாட்டின் உள்ளூர் உளவுத்துறையால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரின் போது கைது செய்யப்படும் கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் அனைத்து சலுகைகளும் மருத்துவ உதவிகளும் வடகொரிய வீரர்களுக்கும் அளிக்கப்படும் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
காயங்களுடன் சிகிச்சையில்
அத்துடன் ஊடகவியலாளர்களும் அந்த இருவருடன் உரையாட அனுமதிக்கப்படும் என்றார். ஆகஸ்ட் மாதம் உக்ரைன் ஊடுருவலைத் தொடங்கிய ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் வட கொரிய துருப்புக்கள் சண்டையிடுவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, குர்ஸ்க் பகுதியில் இன்னும் பல நூறு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு பெருமளவு பீரங்கி குண்டுகளையும் வடகொரியா அனுப்பி வைத்துள்ளது.
இருப்பினும் வடகொரிய வீரர்கள் உக்ரைனுக்கு எதிராக களமிறங்கியுள்ளதை ரஷ்யா இதுவரை மறுக்கவும் இல்லை, அதேவேளை ஒப்புக்கொள்ளவும் இல்லை. தற்போது உக்ரைனிடம் உயிருடன் சிக்கிய இரு வடகொரிய வீரர்களும் காயங்களுடன் சிகிச்சையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அந்த வீரர்கள் கொரிய மொழி மட்டுமே பேசுவதால், தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் விசாரணை முன்னெடுக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.