அவரை புறக்கணியுங்கள்… தேர்தலுக்கு தயாராகும் ஜேர்மன் மக்களுக்கு எலோன் மஸ்க் கோரிக்கை
ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கு வேண்டுகோள்
ஜேர்மனியில் பிப்ரவரி 23ம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி சார்பாக மீண்டும் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எலோன் மஸ்க் ஜேர்மன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேர்மன் மொழியில் Sag Nein zu Scholz! என தமது சமூக ஊடக பக்கத்தில் எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோல்ஸ் அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து, ஜேர்மனியில் புதிய நாடாளுமன்றத்திற்கான திடீர் தேர்தல் பிப்ரவரி 23 அன்று நடைபெற உள்ளது.
ஜேர்மனியில் செயல்பட்டுவரும் தீவிர வலதுசாரி கட்சியான AfDக்கு எலோன் மஸ்க் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார். AfD கட்சியின் தலைவர்களில் ஒருவரான Alice Weidel-ஐ புகழ்ந்துள்ள எலோன் மஸ்க், ஜேர்மன் மக்கள் கண்டிப்பாக AfD கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
காப்பாற்ற முடியும்
AfD கட்சியால் மட்டுமே ஜேர்மனியை காப்பாற்ற முடியும் என உறுதிபட தெரிவித்துள்ள எலோன் மஸ்க், மக்கள் கண்டிப்பாக AfD கட்சியின் பின்னால் திரள வேண்டும் என்றும், இல்லையெனில் ஜேர்மனி மிக மோசமான விளைவுகளை சந்திப்பது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், அவ்வாறு மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு AfD கட்சியை தாம் பரிந்துரைப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஆனால், AfD கட்சியை எலோன் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்த விவகாரம் ஜேர்மனியில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாட்டின் வரவிருக்கும் தேர்தலில் எலோன் மஸ்க் தலையிடுவதாக ஜேர்மன் அரசாங்கம் குற்றம் சாட்டியது. பல்வேறு தலைவர்கள் எலோன் மஸ்கின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
மட்டுமின்றி, தீவிர வலதுசாரிகளை ஆதரப்பதன் ஊடாக ஐரோப்பாவை பலவீனப்படுத்த எலோன் மஸ்க் திட்டமிடுவதாகவும் ஜேர்மனி குற்றஞ்சாட்டியது. ஜேர்மனியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை தங்களின் கொள்கைகளில் ஒன்றாக கொண்டுள்ளது AfD கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.