;
Athirady Tamil News

3 மீ. தூரத்தில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்: இறுதிகட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் இஸ்ரோ தீவிரம்

0

விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அதன்பின் அவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தன.

இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். இரு விண்கலன்களுக்கு இடையேயான தொலைவை 20 கி.மீட்டரில் இருந்து படிப்படியாக குறைத்து அவற்றை ஜனவரி 9-ம் தேதி ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.

அதற்கேற்ப விண்கலன்களின் தூரத்தை குறைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. அப்போது விண்வெளியில் புறச்சூழல் காரணமாக விண்கலன்களின் இயக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததை விட குறைந்துவிட்டது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு தாமதம் ஆனது. அதன்பின் புறச்சூழல் காரணிகளுக்கு தீர்வு காணப்பட்டு விண்கலன்களை நெருக்கமாக கொண்டு செல்லும் பணிகள் ஜனவரி 10-ம் தேதி மாலை தொடங்கப்பட்டன.

அதன்படி முதலில் விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 1.5 கீ.மீட்டராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டுக்கும் இடையேயான தொலைவானது சீரிய இடைவெளியில் 500 மீட்டர், 230 மீட்டர், 105 மீட்டர், 15 மீட்டர் என படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இறுதியாக இரு ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் 3 மீட்டர் அளவில் மிக நெருக்கமாக கொண்டுவரப்பட்டு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் இரண்டும் ஒன்றையொன்று புகைப்படம், காணொலி எடுத்துக் கொண்டன. இந்த பணிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணி வெற்றிகரமாக முடிந்ததும் ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொன்றுக்கு எரிபொருள் பரிமாற்றம் செய்யப்படும். அதன்பின் விண்கலன்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டு அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளில் ஈடுபடும். இதற்காக விண்கலன்களின் செயல்பாடுகள், விண்வெளி புறச்சூழல்கள் காரணிகள் ஆகியவற்றை உன்னிப்பாக ஆராய்ந்து பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றால் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.