சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள்… 100 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என அச்சம்
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 100 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் முடக்கினர்
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தனர். அத்துடன் அதிகாரிகளுடனும் நீண்ட மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சுரங்கத்தில் இருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பொருட்டு, அவர்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை அதிகாரிகள் முடக்கினர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட சில தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள காணொளி நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சுரங்கத்தில் டசின் கணக்கான சடலங்கள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், வடமேற்கு நகரமான ஸ்டில்ஃபோன்டைனில் உள்ள சுரங்கத்தில் குறைந்தபட்சம் 100 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பட்டினி அல்லது நீர்ச்சத்து குறைபாட்டால் இந்த இறப்புகள் நடந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதல், 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது, ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவே கூறபப்டுகிறது.
மோதல் வெடித்தது
பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கையில், திங்களன்று புதிதாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கிய பிறகு, எத்தனை உடல்கள் மீட்கப்பட்டன, உயிர் பிழைத்தவர்கள் எத்தனை பேர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை இன்னும் சரிபார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வெளியான இரண்டு காணொளிகளிலும் டசின் கணக்கான சடலங்கள் காட்டப்படுவதாகவும், பலர் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டிருப்பதாகவும், மெலிந்த, சட்டை அணியாத சுரங்கத் தொழிலாளர்கள் உதவிக்காக மன்றாடுவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் முதலில் சுரங்கத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி நவம்பர் மாதத்தில் சுரங்கத்தை மூட முயன்றனர். இதனையடுத்தே பொலிசாருக்கும் சுரங்கத்தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கைது நடவடிக்கைகளுக்கு பயந்தே தொழிலாளர்கள் வெளியே வர மறுப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, பொலிசாருடனான மோதலையடுத்து இரண்டு மாதங்களாக 400க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.