சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் 36 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் சுரங்கத்துக்குள்ளேயே உணவு, நீரின்றி வாரக்கணக்கில் பதுங்கியிருந்த 36 பேர் பலியாகினர்.
தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது. வடமேற்கில் ஸ்டில்பான்டைனில் உள்ள சுரங்கத்திற்குள் சுமார் 4,000 பேர் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களைத் தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எவ்வித பலனும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் சுரங்கத்தின் வாயிலை அந்நாட்டு காவல்துறையினர் மூடிவிட்டனர். இதன்மூலம், உள்ளிருப்பவர்கள் உணவு, தண்ணீருக்காக வெளியில் வந்துதான் ஆகவேண்டும். அப்போது, அவர்களைக் கைது செய்து விடலாம் என்ற திட்டத்துடன் சுரங்கத்தைச் சுற்றி போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், வெளியில் வராத சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் சிலர் சுரங்கத்துக்குள்ளேயே பலியாகியுள்ளனர்.
சுரங்கத்துக்குள் இதுவரையில் உயிரிழந்தவர்களின் 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்னும் சிலர் சுரங்கத்துக்குள்ளேயே பதுங்கியுமுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிக்கியிருப்பவர்களையும் மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
கடந்தாண்டில் மட்டும் சுமார் 3.17 பில்லியன் டாலர் (ரூ. 27.4 ஆயிரம் கோடி) மதிப்பிலான உலோகங்கள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.