;
Athirady Tamil News

கிரீன்லாந்தை வாங்க புது முயற்சி! ஆதரவு சேகரிக்கும் டிரம்ப் கட்சியினர்!

0

கிரீன்லாந்தை டிரம்ப் வாங்குவதற்காக புதிய மசோதாவை அமெரிக்க அவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் முறையான பேச்சுவார்த்தை நடத்த அதிகாரமளிக்கும் புதிய மசோதாவை, அமெரிக்காவிலுள்ள பிரதிநிதிகள் அவையில் கொண்டுவர குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

மேக் கிரீன்லாந்து கிரேட் அகைன் ஆக்ட் (Make Greenland Great Again Act) என்ற பெயரில் கொண்டு வரப்படவுள்ள இந்த மசோதாவுக்கு ஆதரவு சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவுக்கு இதுவரையில் 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்தை வாங்குவதாக 2019 ஆம் ஆண்டில் டிரம்ப் முதன்முறையாகக் கூறினார். ஆனால், 2020 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தால் நிகழவில்லை. இந்த நிலையில், 2024-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும், டிரம்ப் பல முறை கிரீன்லாந்தை வாங்குவதாகக் கூறி வருகிறார்.

ரஷியா, சீனாவின் ஆதிக்கம் கிரீன்லாந்தில் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வரும்நிலையில், அதனைச் சமாளிக்க கிரீன்லாந்து அமெரிக்கா வசம் வர வேண்டும் என்பதே டிரம்ப் கூறிவரும் கருத்தாகும்.

கிரீன்லாந்தை விற்கும் எண்ணம் இல்லை என்று டென்மார்க் திட்டவட்டமாக கூறிவிட்டது. இருப்பினும், கிரீன்லாந்து மீது ராணுவ, பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா தயங்காது டிரம்ப் தெரிவித்தார்.

வருகிற ஜனவரி 20 ஆம் தேதியில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின், கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.