;
Athirady Tamil News

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் “முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

0

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி கானர் கெய்டோஸ் கூறுகிறார்.

முட்டை வடிவில், இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்ளும் உயரத்தில் உள்ள இந்தக் கருவி ஒரு மினி அணுசக்தி நிலையம் என்கிறார்கள். இந்தக் கருவியால் ஒரு வீட்டின் மின்சாரத் தேவைகளை 10 ஆண்டுகளுக்கு நிற்காமல் இடையூறின்றி வழங்க முடியும் என அறிவித்துள்ளார்கள்.

டெக்சாஸில் உள்ள என்ரான் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், ஒரு அணு ஆயுதத்தில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவில் வெறும் 20% மட்டுமே இந்தக் கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஆபத்து குறைவு எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த அளவு பெரும் ஆபத்தை ஏற்படுத்தப் போதுமானது எனப் பலர் விமர்சித்துவருகிறார்கள்.

ஏற்கனவே லெபனான் செல்போன் வெடிப்பு தாக்குதல்கள் பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் அணு சக்தி நிலையங்களைக் கொண்டுவருவது ஆபத்தான சூழலை உருவாக்குமென பலரை அஞ்சவைத்துள்ளது.

ஆனால் இப்படிப்பட்ட பொருப்பற்ற, ஆபத்தான கண்டுபிடிப்புகளை எப்படி ஒருவரால் உருவாக்க முடியும் என நீங்கள் யோசிக்கலாம்! உண்மைதான், இது உண்மையான கண்டுபிடிப்பு இல்லை! இதை ஒரு கேளிக்கை அறிவிப்பாகவே அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது!

என்ரோன் நிறுவனம் கடந்த 2001 ஆம் ஆண்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளால் திவால் ஆன ஒரு நிறுவனம். ஏற்கனவே “பறவைகள் உண்மையில்லை” எனும் இதேபோன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பலரின் கவனத்தை ஈர்த்த நிறுவனம்தான் இது.

பறவைகள் உண்மையில்லை, அவை அனைத்தும் வேடமிட்ட டிரோன்கள். அமெரிக்கர்களை உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ள டிரோகள்தான் பறவைகள் என, அதற்கு ஆதரங்களாக சில ஆதாரங்களையும் கிண்டலாக சேகரித்து வெளியிட்டது.

”இதுவரை புறா குஞ்சுகளை யாராவது பார்த்ததுண்டா? எப்படி எல்லாமே பெரிய புறாக்களாக இருக்கின்றன? ஏனென்றால் எல்லாமே தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டு நம்மை உளவு பார்க்க அனுப்பப்பட்டுள்ளன.” என்ற பிரசாரங்கள் அப்போது வைரலாகியிருந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுத்துள்ள இந்த நிறுவனம் இந்த முட்டை அறிவிப்பால் மீண்டும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நேர்காணல் ஒன்றில் பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெய்டோஸ், இந்தப் புதிய கருவியில் ”என்ரோனியம்” எனும் புதிய தனிமம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கேளிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு கவன ஈர்ப்பு பிரசாரத்தை முன்னெடுப்பது இந்த நிறுவனத்தின் வழக்கமாகவே மாறிவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.