அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது
சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் தீவிரமாக தடுத்துவந்த சூழலில், அவரது இல்லத்தின் சுவரேறிக் குதித்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவின் அதிபராக இருந்து வந்த யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடர்ந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவருவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றார். இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். அதையடுத்து அவர் தற்காலிகமாக பதவி விலகினார்.
அவரை நிரந்தரமாக நீக்குவது தொடர்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில், அவசர நிலை அறிவிப்பு தொடர்பாக யூன் சுக் இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
அதையடுத்து, அவரைக் கைது செய்ய முயன்ற புலன்விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீஸôரை பாதுகாப்புப் படையினர் கடந்த 3-ஆம் தேதி தடுத்து நிறுத்தியதால் அவர்கள் திரும்பச் சென்றனர்.
இந்தச் சூழலில், யூன் சுக் இயோல் இல்லத்துக்கு புதன்கிழமை வந்த அதிகாரிகள், வீட்டுச் சுவர் ஏறி, இரும்பு முள் வேலியை துண்டித்துத் திறந்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அவர்களின் விசாரணை முடிந்ததும் சிறைக்காவலில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரிய வரலாற்றில் அதிபர் பதவியிலிருந்து முழுமையாக அகற்றப்படாத ஒருவர் கைதாகியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
யூன் சுக் இயோலைக் கைது செய்ய அவரது இல்லத்தின் தடுப்பு வேலியைத் துண்டிக்கும் புலன்விசாரணை அதிகாரிகள்.