;
Athirady Tamil News

டிரம்ப் பதவியேற்பு பிரம்மாண்டம்! ருசிகர தகவல்கள்

0

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் தொடங்குகிறார் டிரம்ப். 1980-ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது போல தற்போதைய பதவியேற்பு விழாவும் கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பாரம்பரியமாக, துணை அதிபரின் பதவியேற்பு, அதிபரின் பதவியேற்பு, அதிபரின் தொடக்க உரை, முந்தைய அதிபரின் புறப்பாடு, அதிபர் பதவிப் பிரமாணத்தில் கையொப்பமிடும் நிகழ்வு, மதிய உணவு ஆகியவை இடம்பெறும். நியூயார்க்கின் பேராயர் கார்தினல் டிமோதி டோலன் பதவியேற்பு விழா பிரார்த்தனைக்கு தலைமை வகிப்பார்.

2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது பிரபல இசைக் கலைஞர் அண்டர்வுட் தனது இசை மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தார். இம்முறையும் அவரே புதிய அதிபரை வரவேற்கும் விதமாகவும் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாகவும் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

உலக நாடுகளின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ள இந்த நிகழ்வு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே அறியலாம்.

அமெரிக்காவில் பதவியேற்பு விழாக்கள் வரலாற்று ரீதியாக ஆழமான பாரம்பரியத்தைக் கொண்டதாக இருந்தன. 1933-ஆம் ஆண்டு அரசமைப்பு திருத்தத்தைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா ஜனவரி 20-ஆம் தேதி நடத்தப்படுகிறது. அதிபரின் அதிகாரபூர்வ பதவியேற்பு விழாவை நண்பகலில் நடத்தும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். அதிபர் தேர்தல் நடந்து முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பதவியேற்பு விழா நடைபெறும்.

தேர்தலுக்கும் பதவியேற்புக்கும் இடைவெளி ஏன்?: வழக்கமாக நவம்பரில் தேர்தல் நடத்தப்படும். வாக்குப்பதிவு நாளுக்குப் பிறகு முடிவுகள் விரைவாகவே அறிவிக்கப்படும். அதன் சில நாள்களுக்குள், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை அதிபர் வெள்ளை மாளிகைக்கு அழைத்து வாழ்த்தி, நிர்வாக நடைமுறைகளை விளக்குவார்.

இந்த ஆட்சி பரிமாற்றக் காலம் பரபரப்பான செயல்முறைகளை உள்ளடக்கியது. இந்தக் காலகட்டத்தில் புதிய அதிபர் தனது நிர்வாகத்தில் அரசியல் நியமன செயல்முறையைத் தொடங்குகிறார். இந்த நடைமுறைப்படி அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 16- ஆம் தேதி நிலவரப்படி முக்கியப் பொறுப்புகளுக்கு 102 பேரை முன்மொழிந்துள்ளார்.

ஆட்சியில் இருந்து வெளியேறும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்களால் கடந்த வாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பீட் ஹெக்செத்தை பாதுகாப்புச் செயலர் பதவிக்கு டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மறுபுறம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதிநிதியாக ஸ்டீவ் விட்வாஃப் பெயரை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அண்மையில் கையொப்பமான அமைதி ஒப்பந்தம் சாத்தியமாவதில் இவர் முக்கியப்பங்கு வகித்தார்.

இத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் (டிரம்ப்), இந்த ஆட்சி பரிமாற்றக் காலத்தில் அமெரிக்க உளவு துறையின் தினசரி முன்கணிப்புகள், எச்சரிக்கை குறிப்புகளைப் பெறுவார்.

பதவியேற்பு நாளில் என்ன நடக்கும்?: வாஷிங்டன் டிசியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிபர்கள் மட்டுமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் எலான் மஸ்க் (இவர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளார்), மார்க் ஸுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டுத் தலைவர்கள் வரிசையில் சீன துணை அதிபர் ஹான் ùஸங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பைடன் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாக்களில் நடந்ததைப் போன்று, வெளிநாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரேஸில் முன்னாள் அதிபர் ஸயிர் பொல்சனாரோ, பிரிட்டனின் வலதுசாரி சீர்திருத்த கட்சித் தலைவர் நிகல் ஃபரேஜ், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். டிரம்ப்பின் நேரடி தொலைபேசி அழைப்பின்பேரில் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் இந்தத் தலைவர்கள், டிரம்ப்பைப் போலவே வலதுசாரி சிந்தனையை ஆதரிப்பவர்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை சேவையுடன் இன்றைய தின அலுவல் தொடங்கும்; அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்து, முன்னாள் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் முதலாவது பெண்மணியாகவும் அழைக்கப்படவுள்ள மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு விருந்தளிப்பார்கள். அதைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் மற்றும் தொடக்க உரைகள் நடைபெறும்.

இதேவேளையில், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸ் பதவியேற்பார். அவரைத் தொடர்ந்து டிரம்ப் தனது தொடக்க உரையை ஆற்றுவார். பின்னர், அதிபரின் அறையில், டிரம்ப் தனது அரசில் இடம் பெறவுள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் மூத்த நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி சில பணி நியமனங்களில் கையொப்பமிடுவார். சில நேரங்களில் அரசின் உத்தரவுகள், பிரகடனங்கள் அல்லது நிர்வாக உத்தரவுகளிலும் புதிய அதிபர் கையொப்பமிடக்கூடும்.

இந்நிகழ்வுக்குப் பிறகு மதிய உணவு நிகழ்வு நடைபெறும். இறுதியாக, பென்சில்வேனியா அவென்யுவில் உள்ள கேப்பிடல் கட்டடத்திலிருந்து வெள்ளை மாளிகை வரை தலைவர்கள் அணிவகுப்பாக நடந்து செல்வர். வழக்கமாக திறந்தவெளியில் ராணுவப் படைப் பிரிவுகள், சிட்டிசன் குரூப் எனப்படும் குடிமக்கள் குழுக்கள், அணிவகுக்கும் இசைக் குழுக்கள் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

இம்முறை உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடப்பதால் 20,000 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட கேப்பிட்டல் ஒன் அரங்கில் இந்த மரியாதை நிமித்தமான அணிவகுப்பு நடைபெறும்.

பதவிப் பிரமாணம் சொல்வது என்ன?: பதவியேற்பு விழாவின் மிக முக்கியப் பகுதி அதிபரின் பதவிப் பிரமாணமாகும். இந்த நாளின் ஒரே நிகழ்வாக இதை மட்டுமே அமெரிக்க அரசமைப்பு கொண்டுள்ளது. மற்ற நிகழ்வுகள் அனைத்தும் பாரம்பரியமாக நடத்தப்படுபவை.

1884-ஆம் ஆண்டு முதல் பதவிப் பிரமாண உரை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது: அதில், “அமெரிக்காவின் அதிபர் பதவியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும், எனது சிறந்த திறனுக்கு ஏற்றவாறு, அமெரிக்காவின் அரசமைப்பைப் பராமரித்து, பாதுகாத்து, தற்காப்பேன் என்றும் நான் உறுதியேற்றுக் கொள்கிறேன்’ என ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதிபராக டிரம்ப்பும் துணை அதிபராக வான்ஸும் பதவியேற்கும்போது இருவரும் பைபிளில் தங்களின் கைகளை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வர். இவ்வாறு செய்வது ஜார்ஜ் வாஷிங்டன் பதவிக்காலம் முதல் ஒருங்கிணைந்த சடங்காகி விட்டது. பாரம்பரியமாக புதிய அதிபர் மற்றும் துணை அதிபருக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.