ரயிலில் தீ? கீழே குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 11 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழப்பு 11-ஆக உயர்ந்துள்ளது.
லக்னௌ ரயில் நிலையத்திலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது, இன்று(ஜன. 22) மாலை 4 மணியளவில் பராண்டா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பொறி பற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அச்சமடைந்த பயணிகள் சிலர், உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இதனிடையே, ரயிலில் தீப்பற்றிவிட்டதாக புரளி வேகமாகப் பரவியுள்ளது. இதனை உண்மையென்று நம்பிய சிலர், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து ரயிலிருந்து உடனடியாகக் கீழே குதித்தும்விட்டனர்.
அப்போது அருகேயுள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பயணிகள் மீது மோதியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.