;
Athirady Tamil News

‘கலா ரசனா’ அமைப்பு நடத்திய இசை, நடன நிகழ்வுகள்

0

புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் எமது இளம் தலைமுறையினரின் கலைத் திறன்களை ஒரே மேடையில் சங்கமிக்கவைத்து, எதிர்கால சந்ததியினர் தம்மிடையே ஓர் அந்நியோன்யத்தை தொடர்வதை நோக்காகக்கொண்டு லண்டனின் ‘கலா ரசனா’ அமைப்பு யாழ். கலாசார மண்டபத்தில் ஆண்டு தோறும் இரு இசை, நடன நிகழ்வுகளை நடாத்துகிறது. கடந்த ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற இதன் முதலாவது நிகழ்வைத் தொடர்ந்து அதன் இரண்டாவது நிகழ்வு கடந்த 17, 18ஆம் திகதிகளில் நடைபெற்றது.

முதல் நாள் சிறப்பு இசை அரங்காக, இந்தியாவிலிருந்து வந்த பிரபல திரை இசைப் பின்னணி பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான பாலக்காடு சிறீராமின் இசைக் கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வந்த பக்கவாத்திய கலைஞர்கள் பக்கல ராமதாஸ் (வயலின்), ஏ. எஸ். ரங்கநாதன் (மிருதங்கம்) ஆகியோருடன் இலங்கைக் கலைஞரான சிவசுந்தரசர்மாவும் (கெஞ்சிரா) கலந்துகொண்டார்.

இரண்டாம் நாள் இரு நடன நிகழச்சிகள் நடைபெற்றன. அமெரிக்காவிலிருந்து வந்த பரதநாட்டிய கலைஞர் கலைமகள் சந்திரசேகரம் ‘சங்கமும் சுனாமியும்’ என்று, சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை தற்போதைய காலத்துடனும் தொடர்புபடுத்தி, சிறந்த உரை விளக்கமும் சேர அளித்த நடன நிகழ்வு சிறப்பாக இருந்தது.

அதைத் தொடர்ந்து கொழும்பு தியாகராஜர் கலைக்கோவில் அளித்த ‘மனம் சுமந்த வலிகள்’ நாட்டிய நாடகம் யதார்த்தமாய் வெளிப்படுத்திய ஈழத் தமிழரின் வரலாறும், வாழ்வும், அவர்களின் அண்மைக்கால அவலங்களும் அவை முழுமையையும் மௌனமாக்கி ஆட்கொண்டமை பெரு வியப்பாய் அமைந்தது. நம்மைப்பற்றிய நினைவுகளை மீட்டியது. நடன ஆசிரியை திருமதி பவானி குகப்பிரியா நெறிப்படுத்தியிருந்த இந் நாட்டிய நாடகத்தில் முப்பது பேர் வரை பங்குபற்றியிருந்தனர். தென்கயிலை ஆதீன முதவ்ர் அகத்தியர் அடிகளார் பாடல் வரிகளை ஆக்கியிருந்தார். ‘கலா ரசனா’வின் இந்த ‘சங்கமம்’ நிகழ்வின் இரண்டு நாள் நிகழ்வும் அரிதான ஒரு வாய்ப்பாக இருந்தது. அடுத்த சங்கமம் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் வட மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டபோது, இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாண ஆளுநர் திரு நா. வேதநாயகம் கலந்து கொண்டார்.

இந்திய அரசின் அன்பளிப்பான யாழ் கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதில் ஏற்படும் பெருமளவு நிர்வாகச் செலவினம் தொடர்பில் யாழ். மாநகர சபைக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் லண்டனைச் சேர்ந்த ‘கலா ரசனா’ அமைப்பினரின் மற்றொரு நோக்காகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.