;
Athirady Tamil News

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது

0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை புதன்கிழமையன்று (ஜனவரி 22) முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் காவல்துறை கைது செய்தது.

பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்ததற்காக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட பல கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

பெரியார் குறித்த தனது பேச்சுக்கு சீமான் ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், சீமான் வீட்டை பெரியார் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் முற்றுகையிடப் போவதாக கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனையடுத்து ஜனவரி 21ஆம் தேதி இரவு முதல் சென்னையின் பல பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஜனவரி 22ஆம் தேதி காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்காக 1,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் சீமானுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

அதேவேளையில், சீமான் வீட்டின் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். வீட்டின் முன்பாக அவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களைக் காவல்துறை கைதுசெய்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.