;
Athirady Tamil News

தில்லியில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!

0

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

தில்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கடும் குளிா் நிலவி வருகிறது. நகரம் முழுவதும் மூடுபனி சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். காண்புதிறன் குறைந்ததால் விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்படுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட அடா்ந்த மூடுபனி, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் காண்பு திறன் குறைவாக இருந்ததன் காரணமாக பல விமானங்கள் தாமதமாகின. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் தாமதமாகின.

இதற்கிடையே, நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

தலைநகரில் காலை 7 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 207 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

வாரணாசி மற்றும் அயோத்தி உள்பட உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களைச் சுற்றி அடா் மூடுபனி நிலவியது.வாரணாசி மற்றும் அயோத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

வாரணாசியில் பிற்பகலில் தெளிவான மேகமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமாக உள்ளது.மேலும் அடா் மூடுபனி நிலவுவதாக வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்சிலும் அடர்த்தியான அடா் மூடுபனி காணப்பட்டது, இதனால் காண்புதிறன் குறைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.