புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி! பிரியங்கா காந்தி இரங்கல்!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற பழங்குடியின பெண் ஒருவர் இன்று (ஜன.24) காலை காபிக் கொட்டைகள் பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலியான ராதாவின் உடல் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை சுற்றியிலும் புலியின் கால்தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமறிந்து அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் புலியைப் பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதுவரையில் அந்த பெண்ணின் உடலை கூராய்வு சோதனை செய்ய விடமாட்டோம் எனக் கூறி கேரள அமைச்சர் ஓ.ஆர். கேலூவின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த புலியை உயிருடன் அல்லது சூட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கேலூ தெரிவித்துள்ளார். ராதாவின் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் இதுப்போன்ற சம்பவங்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேலூ உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக, புலி தாக்கியதில் பலியான ராதாவின் கணவர் அச்சப்பன் வனத்துறையில் கண்கானிப்பாளராக பணியாற்றி வருகிறார். அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக துரித நடவடிக்கை குழுக்கள் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராதாவின் இறப்பு செய்தி அறிந்த வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், இந்த சம்பவம் குறித்து அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.