பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு தீா்ப்பு: சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது ஜன.27-இல் உயா்நீதிமன்றம் விசாரணை

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரும் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 27-இல் கொல்கத்தா உயா்நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-இல் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்.
மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலை கிளப்பிய இச்சம்பவத்தில், காவல்துறைக்கு உதவும் தன்னாா்வலராக பணியாற்றிவந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் சஞ்சய் ராயை குற்றவாளியாக அறிவித்த சியால்டா நீதிமன்றம், அவருக்கு மரணம் வரை சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் இத்தீா்ப்பால் பெண் மருத்துவரின் குடும்பத்தினா் உள்பட பல்வேறு தரப்பினா் ஏமாற்றமடைந்தனா்.
இந்தச் சூழலில், ‘குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல; அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’ என்று கோரி, வழக்கை விசாரித்த சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென நீதிபதி தேபாங்ஷு பசாக் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜ்தீப் மஜும்தாா் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 27-ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்றனா்.