அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை கைவிடும் இந்திய மாணவர்கள்!

அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை கைவிடுகிறார்கள் இந்திய மாணவர்கள்!
அமெரிக்காவில் கல்வி பயில எஃப்-1 விசா பெற்றுச் சென்றிருக்கும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் பணியாற்றலாம் என்ற விதி இருந்தபோதும், தங்களது பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்காக பகுதிநேர வேலைகளை இந்திய மாணவர்கள் கைவிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகங்கள், எரிவாயு நிரப்பும் நிலையங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் இந்திய மாணவர்கள் பகுதிநேர வேலை செய்து, அதன் மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டு தங்களது அத்தியாவசிய தேவைகளை சமாளித்துக்கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரத்துக்கு 7 முதல் 10 டாலர்கள் வரை அங்கு வருவாய் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் நாள் ஒன்றுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை பணியாற்றி சம்பளம் ஈட்டி வந்துள்ளனர்.
ஆனால், குடிவரவு அதிகாரிகள், அங்கீகரிக்கப்படாத வேலைகளை ரத்து செய்யும் அபாயம் இருப்பதாகக் கேள்விப்பட்ட பிறகு கடந்த வாரம் ஏராளமான இந்திய மாணவர்கள், தங்களது பகுதிநேர வேலைகளை விட்டுவிட்டனர்.
கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் வரை கடன்பெற்றுத்தான், அமெரிக்காவில் கல்வி பயில வந்திருக்கிறார்கள் பெரும்பாலான மாணவர்கள். ஆனால், இந்த ஒரு காரணத்தால் தங்களது எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக்கு ஏதேனும் பங்கம் வந்துவிடக் கூடாது என்றுதான் அவர்கள் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
நிலைமை எவ்வாறு செல்கிறது என்பதைப் பொறுத்து மீண்டும் பகுதிநேர வேலையைத் தொடர்வது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்றும், அதுவரை செலவுகளைக் குறைத்து, கடன் வாங்கி, குடும்பத்தாரிடம் பணம் அனுப்பச் சொல்லித்தான் நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலையில் இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது