3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொலையின் முக்கியக் குற்றவாளி சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தேடப்பட்டு வந்த முக்கியக் கொலை குற்றவாளி காவல் துறையினர் நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மீரட்டின் லிஸாரி கேட் பகுதியில் கடந்த ஜன.9 அன்று மொயின் (எ) மொயினுத்தீன் (வயது 52) அவரது மனைவி அஸ்மா (45), அவர்களது மகள்கள் அஃப்சா (8), அஜீஸா (4) மற்றும் அதீபா (1) ஆகியோர் தலையில் அடித்து கொல்லப்பட்டனர்.
மேலும், கணவன் மனைவி இருவரின் உடல்களும் போர்வையில் சுற்றப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களது குழந்தைகள் மூவரின் உடல்களும் அலமாரியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மொயினுதீனின் மாற்று சகோதரரான ஜமீல் ஹுசைன் (எ) நயீம் மற்றும் அவரது கூட்டாளி சல்மான் ஆகிய 2 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இதில், முக்கியக் குற்றவாளியான நயீமின் மீது தில்லி மற்றும் தாணேவில் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அடிக்கடி தனது பெயரையும் இருப்பிடத்தை மாற்றி காவல் துறையினரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளார். மேலும், இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் பிடிக்க காவல் துறையினர் ரூ.50,000 சன்மானம் அறிவித்து தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜன.25) காலை மதீனா காலனி பகுதியில் நயீம் பதுங்கியுள்ளதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, நயீம் தப்பிச் செல்வதற்காக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் நயீம் மீது குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நயீமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சொத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது கூட்டாளியான சல்மானை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.