;
Athirady Tamil News

சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

0

சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார்.

அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52) என்பவர் அதிகப்படியான வியர்வை, நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்டு, நினைவற்ற தன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அந்த பெண் மூளைச்சாவு அடைந்தார்.

மூளைச்சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க இருவரின் குடும்பத்தினரும் முன்வந்தனர். இதையடுத்து, 4 சிறுநீரகங்கள், 2 கல்லீரல்கள், 2 கணையங்கள், இதய வால்வுகள், ஒரு சிறுகுடல் மற்றும் வயிற்றுப்பகுதி, 4 கண்விழிப்படலங்கள் எடுக்கப்பட்டன.

உறுப்பு மாற்று சிகிச்சை: இதில், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள 43 வயது பெண்ணுக்கு ஒரு சிறுநீரகம், 36 வயது ஆணுக்கு ஒரு சிறுநீரகம், 61 வயது ஆணுக்கு ஒரு கல்லீரல், 48 வயது ஆணுக்கு ஒரு கல்லீரல், 36 வயது பெண்னுக்கு ஒரு கண் விழிப்படலம், 46 வயது ஆணுக்கு ஒரு கண் விழிப்படலம் பொருத்தப்பட்டது.

2 கண் விழிப்படலங்கள் இருவருக்கு பொருத்துவதற்காக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை கண் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. பிற உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ சிகிச்சைத் துறையில் சாதனையாக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையத்தில் 24 மணிநேர இடைவெளிக்குள் ஏற்பட்ட இரண்டு மூளைச்சாவு நோயாளிகளின் உறுப்புகளைத் தானமாகப் பெற்று மற்றவர்களுக்கு பொருத்தி புதிய வாழ்க்கை அளிக்க 6 அறுவை சிகிச்சை கூடங்களும், சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுக்களும் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டன.

மருத்துவர்கள் குழு: இந்த சிகிச்சைகளில் 30 மருத்துவர்களும், 50 துணை மருத்துவர்களும் இணைந்து பணியாற்றினர். இதனால் இயல்பாக நடக்கும் மற்ற அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை. இதன்மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மாற்று உறுப்பு பெற்ற அனைத்து நோயாளிகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று துறை பேராசிரியர் மருத்துவர் கே.நடராஜன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.