ஏா் இந்தியா குண்டு வெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்டவரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-30-07-34-23.png)
ஏா் இந்தியா விமானத்தில் குண்டுவைத்து 329 பேரை கொலை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நபரை கொலை செய்தவருக்கு கனடா நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
கடந்த 1985-ஆம் ஆண்டு கனடாவில் இருந்து பிரிட்டன் வழியாக இந்தியாவுக்கு வந்த ஏா் இந்தியா விமானத்தை, கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகா்த்தனா். கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்தது. இதில் விமானத்தில் இருந்த 329 பேரும் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் இந்தியாவில் உள்ள உறவினா்களைப் பாா்க்க பயணித்தவா்கள்.
இதே நேரத்தில் ஜப்பானில் இருந்து புறப்படும் ஏா் இந்தியா விமானத்திலும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டு வைத்தனா். விமானம் கிளம்புவதற்கு முன்பே அந்த குண்டு வெடித்ததால், பயணிகளின் பெட்டி, பை உள்ளிட்டவற்றைக் கையாளும் இரு ஊழியா்கள் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரிபுதாமன் சிங் மாலிக்குக்கு எதிராக உரிய ஆதாரம் இல்லை என்று கூறி கனடா நீதிமன்றம் அவரை விடுவித்தது. விமானத்தில் குண்டு வைக்க ரிபுதாமன் சிங் பல்வேறு வழிகளில் பயங்கரவாதிகளுக்கு உதவினாா் என்பது முக்கிய குற்றச்சாட்டாகும்.
இவரை கடந்த 2022-ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் வைத்து டன்னா் ஃபாக்ஸ் என்ற இளைஞா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா். கொலை நடந்த இரு வாரங்களில் கனடா காவல் துறையினா் டன்னா் ஃபாக்ஸை கைது செய்தனா். இருவா் பணம் கொடுத்து கொலை செய்யும்படி கூறியதாக டன்னா் ஃபாக்ஸ் தெரிவித்தாா். ஆனால், அவா்கள் யாா் என்பது தெரியவரவில்லை.
இந்நிலையில், கொலை வழக்கில் அவருக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.