யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அந்நிலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தில் மாணவர்களின் வகுப்பு தடையை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
அதனை அடுத்து , மாணவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் , பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராசிரியர் ரகுராம் தனது கலைப்பீட பீடாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.
பேராசியர் பதவி விலக கூடாது என கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட சிலர் கோரி வந்ததுடன் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , பேராசிரியர்களும் கோரி வந்தனர்.
அதேவேளை பேராசிரியர் ரகுராமின் இராஜினாமாவை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க கூடாது என கூறி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டது.
அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பேரவை கூட்டம் கூட்டப்பட்டு , மாணவர்களின் வகுப்பு தடையை நீக்க கோரி தாம் முன்னர் எடுத்த தீர்மானத்தை மீள பெறுவதாக கூறியதை அடுத்து , ரகுராம் தனது பீடாதிபதி பதவியை தொடர இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.