;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் மன வேதனையை தருகின்றது – கடற்தொழில் அமைச்சரின் இரங்கல்

0

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவைசேனாதிராஜா அவர்களின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் மன வேதனையை தருகின்றது.

அவரின் மறைவானது தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, ஜே.வி.பியின் ஸ்தாபகர் தோழர் ரோஹண விஜேவீரவின் போராட்டங்களைக்கூட நேர்கொண்ட பார்வையுடன் அவதானித்தனர்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.பி.யின் அணுகுமுறை தொடர்பில் ஆதரவு போக்கை கடைபிடித்தவர்.

5 தசாப்தகால அரசியல் பயணத்தின்போது, மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்ட அரசியல்வாதியாவார். மாவை அண்ணன் மறைந்தாலும், மக்களுக்காக அவர் எதிர்பார்த்தவற்றை நிச்சயம் நாம் செய்வோம்.

மாவை சேனாதிராஜா அவர்களின் பிரிவால் துயர் உற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.