;
Athirady Tamil News

6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!

0

டென்மார்க் நாட்டில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் உயிரினத்தின் எச்சம் (வாந்தி) படிமங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கோபன்ஹேகனின் தெற்கு பகுதியில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டீவன்ஸ் எனும் இடத்திலுள்ள பாறைகளில், படிமங்கள் சேகரிப்பாளரான பீட்டர் பென்னிக் என்பவர் காய்ந்த சுண்ணாம்பு கலவையின் மத்தியில் கடல் அல்லியின் உதிரிகள் இருப்பதை கவனித்து அதனை சேகரித்து ஆய்விற்காக கிழக்கு ஸீலாந்து அருங்காட்சியகத்திற்கு அனுப்பியுள்ளார்.

அங்கு அதனை ஆய்வு செய்து பார்த்தில் அது சுமார் 6.6 கோடி (66 மில்லியன்) ஆண்டுகளுக்கு முந்தைய க்ரெட்டாஷியஸ் காலத்தில் வாழ்ந்த கடல்வாழ் உயிரினத்தின் வாந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில் அந்த எச்சத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கடல் அல்லி பூக்களின் உதிரிகள் இருப்பதாகவும், அதை அக்காலத்தில் வாழ்ந்த கடல் உயிரினம் ஏதேனும் சாப்பிட்டு, ஜீரணமாகாமல் கக்கியிருக்கக் கூடும் எனக் கணித்துள்ளனர்.

இதுபோன்ற அரிதான படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் மூலம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் உணவு சங்கிலி குறித்த தகவல்கள் பெற்று அதன் மூலம் ஓர் உயிரினம் எந்த உயிரினத்திற்கு உணவாகியுள்ளது என்பது தெரிய வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எச்சமானது 6.6 கோடி (66 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியிலிருந்த க்ரெட்டாஷியஸ் கடலில் வாழ்ந்த மீன் வகையைச் சேர்ந்த உயிரினத்தாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.