;
Athirady Tamil News

கனடாவில் மாயமான இளம்பெண்: குழப்பத்தில் இந்திய பெற்றோர்

0

கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கடற்கரைக்குச் சென்றபோது மாயமானார்.

அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்துவருகிறார்கள்.

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இளம்பெண்
இந்தியாவின் பஞ்சாபிலிருந்து கல்வி கற்பதற்காக 2022ஆம் ஆண்டு கனடா வந்தவர் சந்தீப் கௌர் (22).

வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துவந்த சந்தீப் கௌர், தான் சொன்னபடியே சுற்றுலாத்துறையில் பட்டயப்படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்துள்ளார், நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும் பெற்றுவிட்டார்.

இந்நிலையில், இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 15ஆம் திகதி, சந்தீப் கௌர் Cape Spear என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.

நிகழ்ந்த சோகம்
கடற்கரையில், ஆபத்தான பகுதி என அறிவிக்கப்பட்ட ஒரு இடத்துக்கு சந்தீப் கௌரும் அவரது நண்பரும் சென்றுள்ளனர்.

அப்போது, சந்தீப் கௌர் கடலில் தவறி விழுந்ததாகவும், அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தீப் கௌரின் நண்பர் அவரை காப்பாற்ற முயன்றதாகவும், அவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட, மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

சோகம் என்னவென்றால், இதுவரை சந்தீப் கௌரின் உடல் கிடைக்கவில்லை!

தவிக்கும் பெற்றோர்

இந்நிலையில், கனடாவில் உண்மையில் தங்கள் மகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்து வருகிறார்கள்.

காரணம், சந்தீப் கௌர் கடலில் விழுந்ததாக கூறப்படுவதற்கு மூன்று மாதங்கள் முன், அவர் தனது சமூக ஊடக கணக்குகள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

விடயம் என்னவென்றால், சமூக ஊடகம் வாயிலாகத்தான் சந்தீப் கௌர் தன் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதற்கிடையில், சந்தீப் கௌருடன் கடலுக்குச் சென்ற நபரை தொடர்புகொள்ள கனேடிய ஊடகங்கள் முயன்றுள்ளன. ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

ஆக, பரம்பரை நிலத்தை விற்று சந்தீப் கௌரை கனடாவுக்கு அனுப்பிவைத்த அவரது பெற்றோர், மகள் தங்கள் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்து விடுவார் என்னும் நம்பிக்கையில் இருந்த நிலையில், அவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுவதைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.